தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்காக கட்சி தொடங்கப்படும் என நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீண்டும் அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் 33 லோக்சபா தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர் எனவும் எஸ்வி சேகர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இதர மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பிராமணர் ஆதிக்கம்- பிராமணிய சித்தாந்தம் ஆகியவற்றுக்கான எதிர்ப்பு வலுவானது. இந்தியாவில் பிராமணர் ஆதிக்கம், பிராமணிய சித்தாந்தத்தை கடுமையாக காலந்தோறும் எதிர்க்கக் கூடிய நிலமாக தமிழ்நாடு இருக்கிறது.
100 ஆண்டுகளுக்கு முந்தைய நீதிக் கட்சி, பின்னர் தந்தை பெரியார், திராவிடர் கழகம் என சமூக நீதி கோட்பாட்டை அடித்தளமாக கொண்ட மக்களுக்கான சக்திகள் அனைத்தும் பிராமணர் ஆதிக்கம், பிராமணிய சித்தாந்தத்தை மிக முழு வீச்சோடு எதிர்த்தன. இந்த எதிர்ப்பு இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சமூக, அரசியல் பின்னணியில் அகில இந்திய அளவில் பிராமணர்களுக்கான கட்சியாக பாஜக அறியப்பட்டிருந்த போது தமிழ்நாட்டிலும் 1980, 1990களில் பிராமணர்கள் ஆதிக்கம் அக்கட்சியில் இருந்தது. இதனால் தமிழ்நாட்டில் பாஜகவுக்கான அடித்தளம் அமையவே இல்லாமல் போனது. அகில இந்திய பாஜக கட்டமைப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பெரும்பான்மையினராக ஆதிக்கம் செலுத்தியதைப் போல தமிழ்நாட்டு பாஜகவிலும் மெல்ல மெல்ல பிராமணர் ஆதிக்கம் குறைந்தது. இதர பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகத்தினர் தமிழ்நாடு பாஜகவின் தலைமை பொறுப்பு உள்ளிட்ட பெரும்பான்மை பொறுப்புகளுக்கு வந்தனர். தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர் தாங்கள் ஓரம்கட்டப்படுகிறோம்; பாஜகவில் இருந்து விலக்கப்படுகிறோம் என பிராமணர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். அண்மையில் நகைச்சுவை நடிகர் எஸ்வி சேகர் போன்றவர்கள், இந்த கருத்துகளை வெளிப்படையாகவே பேசியும் வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக பிராமணர்களுக்கு என தனியே ஒரு கட்சி தொடங்குவது குறித்த பேச்சும் அடிபட்டு வருகிறது.
லோக்சபா தேர்தல் 2024-ல் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளில் 33 தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள் போட்டியிடுவர். எங்களுக்கு பிராமணர்கள் மட்டும் ஓட்டுப் போட்டால் போதும். ஏனெனில் தமிழ்நாட்டில் பிராமணர் எண்ணிக்கை எவ்வளவு என அரசாங்கத்திடம் இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது என்பது ஒன்றரை முதல் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் அமைகிறது. பிராமணர்களுக்கான கட்சிக்கு மொத்தம் உள்ள 48 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் வாக்களித்தாலே 2026-ல் சட்டசபையில் பிராமணர்கள் குரல் கேட்கும். 3% பிராமணர்கள் இருப்பதாக கருதினால் 8 எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள். நாங்கள் எந்த ஒரு ஜாதிக்கும் எதிரானவர்கள் இல்லை. இதற்கு எல்லாம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் முன் மாதிரி. அப்படியான ஒரு கட்சிக்கு நான் தலைவராக வேண்டும் என அவர்கள் விரும்பினால் பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டு பாஜகவில் இருந்து விலகிவிடுவேன். இவ்வாறு எஸ்வி சேகர் கூறினார்.