அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 27 ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில் தான் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்ய வேண்டும் எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றம்சாட்டியும் அவரது மனைவி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை பரிசோதனையில் அவருக்க இதயத்தில் 3 அடைப்பு இருப்பதும் பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இதற்கிடையே தான்அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.
3 நாட்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா காணொலி காட்சி மூலம் ஆஜராகி வாதாடினார். செந்தில் பாலாஜி தரப்பி்ல என்ஆர் இளங்கோ வாதங்களை எடுத்து வைத்தார். துஷார் மேத்தா வாதாடுகையில் “ஆட்கொணர்வு வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன் வைக்க வேண்டும்” என்றார்.
செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் என்ஆர்இளங்கோ, “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளதால் மனு விசாரணைக்கு உகந்தது. ஏனென்றால் செந்தில்பாலாஜி கைது சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை. கைது குறித்த தகவலையும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை. நீதிமன்ற காவலில் வைத்த ஆணை சட்ட விரோதமானது என்பதால் மனு விசாரணைக்கு உகந்தது தான். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய ஐகோர்ட்டு உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்த பிறகும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் வழக்குப் பதிவு செய்துள்ளது” என்று வாதாடினார். இதையடுத்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் 27-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது சட்டவிரோதமானது என்பதால் ரத்து செய்ய கோருகிறோம். மேலும் தனது கணவருக்கு எதிராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவானது ஏற்கனவே அவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவுக்கு வலு சேர்க்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.