ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் மூன்று நாட்களில் சென்னை திரும்புவதாக தன்னிடம் போனில் தெரிவித்ததாக மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினி, படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். நேற்று காலையில் அவருக்கு உடல்சோர்வு அதிகமாக இருந்ததால் ஐதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரஜினிக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பதும் தெரியவந்தது.
அட்மிட் செய்யப்பட்டதில் இருந்ததைவிட, இப்போது ரஜினிக்கு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜன சேனா தலைவர் பவன்கல்யாண், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் ரஜினியிடம் தொடர்புகொண்டு உடல்நலம் விசாரித்த நிலையில் இன்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நலம் விசாரித்து, விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் தொலைபேசியில் ரஜினியை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது, தான் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் சென்னை திரும்பிவிடுவேன் என்று கூறியதாகவும் அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.