சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. அரசு பலகட்ட முயற்சிகளை கொரோனா ஒழிப்பிற்கு எடுத்துவருகிறது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் உருமாற்றம் அடைந்து கொரோனா வைரஸின் இரண்டாம் அலையும் துவங்கிவிட்டது. இப்படியான சூழலில், கொரோனாவுக்கு போடப்படும் தடுப்பூசிகளில் பசுவின் ரத்தம் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்துக்கள் பசுவை கோமாதா என வணங்கிவருகின்றனர். பசுவின் கோமியத்தையும் தீர்த்தமாக மதிக்கின்றனர்.பசுஞ் சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபடும் மரபும் இருக்கிறது. இந்துமத சடங்குகளில் கோபூஜையும் முக்கியத்துவம் வாய்ந்தது. வீட்டில் கோமாதாவுக்கு பூஜை செய்து வணங்கினால் சகல பாவங்களும் நீங்கி, செல்வம் கொட்டும் என்பது ஐதீகம். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு செலுத்தப்படும் தடுப்பூசியில் பசுவின் ரத்தம் கலந்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய இந்துமகா சபா தலைவர் சுவாமி சக்ரபாணி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், ‘பிரிட்டீஸ்காரர்களின் ஆட்சியில் பசுவின் கொழுப்பால் ஆன துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு இந்துமதத்தை இழிவுபடுத்தியதுபோல் தற்போது பசுவின் ரத்தம், மாமிசம் மற்றும் கொழுப்பை கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்ற பெயரில் உடலுக்குள் அனுப்பி இந்து மதத்தை அழிக்கும் நோக்கத்தில் சர்வதேச சதி நடைபெறுகிறது.
இதன் காரணமாக, இந்தியாவில் கரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்தும் முன்னர் அதில் பசு ரத்தம் கலக்கப்படிருக்கிறதா என்பதை அரசும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் தெரிவிக்கவேண்டும்.’’என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.