ஃபேர்வொர்க் இந்தியா என்ற அமைப்பு அவ்வப்போது நிறுவனங்கள் தொடர்பாக ஆய்வுசெய்து முடிவுகளை அறிவிப்பது வழக்கம். இணைய வர்த்தகத்தில் இவர்களது ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சமீபத்தில் இந்த மேற்கொண்ட ஆய்வில் உணவுப்பொருள்களை வீடுகளுக்கு வந்து வினியோகிக்கும் சோமேட்டோ நிறுவனத்தை டிஜிட்டல் தளத்தில் மிக மோசமான நிறுவனம் என தரவரிசைப்படுத்தியுள்ளது.
நியாயமான வேலைக்கு நியாயமான ஊதியம், நியாயமான ஒப்பந்தம், நியாயமான நிர்வாகம், நியாயமான பிரதிநிதித்துவம் மற்றும் நியாயமான நிலமைகள் என்ற ஐந்து தகுதிகளின் அடிப்படையில் நிறுவனங்களுக்கு ஃபேர்வொர்க் இந்தியா அமைப்பு புள்ளிகளை வழங்கி தரவரிசைப்படுத்தியுள்ளது.
இதில் நகர்புறத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 8 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக பிளிப்கார்டின் விநியோக நிறுவனமான ஈகார்ட் 7 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
பிரபல நிறுவனங்களான அமேசான், பிக்பாஸ்கட், ஓலா ஆகியவை தலா இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளன. இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் சோமேட்டோ தனது போட்டி நிறுவனமான ஸ்விகி மற்றும் வாடகைக்கு கார்களை விடும் நிறுவனமான உபேர் ஆகியவை தலா ஒரு புள்ளியைப் பெற்று கடைசி மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் சோமேட்டோ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான கொயல் இந்த ஆய்வில் தங்களது நிறுவனம் பிடித்துள்ள கடைசி இடத்துக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.