சியோமி நிறுவனமானது மூன்று விதமாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவை மூன்றும் வெவ்வேறு வடிவமைப்புகளை கொண்டிருக்கும் எனவும் இதை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்ய சியோமி திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து டிஸ்ப்ளே வடிவமைப்பு வல்லுநரான ரோஸ் யங் என்பவர் வெளியிட்டு இருக்கும் தகவல்களின்படி சியோமி நிறுவனத்தின் மூன்று மாடல்களானது வெளிப்புறம் மடிக்கும் தன்மை, உள்புறம் மடிக்கும் தன்மை மற்றும் கிளாம்ஷெல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதில் வெளிப்புறம் மடிக்கும் தன்மை கொண்ட மாடல் ஹூவாய் மேட் எக்ஸ் போன்று காட்சியளிக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாகவே ரோஸ் யங் ஒப்போ, விவோ மற்றும் சியோமி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நான்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை 2021 ஆண்டு வெளியிடும் என ஏற்கனவே தெரிவித்து இருந்தார். சமீபத்தில் தான் சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கான காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.