சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் செயற்கைகோள் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் நாடகங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் நடித்து வந்தார். இந்நிலையில் டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள விடுதி அறைக்கு திரும்பிய நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக நசரத்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.
சித்ரா விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கடைசியாக இந்த நிகழ்ச்சி படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டுதான் விடுதி அறைக்கு திரும்புயுள்ளார். இந்நிலையில அவர் இறுதியாக பங்கேற்ற நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் வரும் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான விளம்பரம் தற்போது வெளியாகியுள்ளது.
சின்னத்திரை நாடகத்தில் முல்லை என்ற கதாப்பாத்திரமாக நடித்து வந்த சித்ராவுக்கும் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்துக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது இன்னும் திருமணம் முடியவில்லை. கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத் தொழிலதிபராக உள்ளார். இவர் டிசம்பர் 28 வரை நீதிமன்ற காவலில் பொன்னேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.