உத்தரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த 18ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியானது. இதை தொடர்ந்து அவர் வீட்டில் சுயதனிமையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் 60 வயதான திரிவேந்திர சிங் ராவத்துக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் டேராடூனில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது மார்பில் நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் புது தில்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இன்று காலை மாநில ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் புது தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்த மூத்த அதிகாரிகள் மற்றும் மந்திரி சபை சகாக்களுக்கு கரோனா நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காரணத்தால் உத்திரகண்ட் மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இந்த வருடம் ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் மேற்கொண்ட கோவிட் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவுகள் வந்தது குறிப்பிடதக்கது.
இதுவரை உத்திரகண்ட் மாநிலத்தில் 89,000 பேர் கோவிட் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அதில் 1,483 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளனர். உத்திரகண்ட் மாநிலத்தைப் பொருத்தவரை டேராடூன் மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான மக்கள் (26,806 பேர்) கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.