கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் குறையத் தொடங்கியதும் ஊரடங்கில் படிப்படியாக தளவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வருவதால் நாளை முதல் பிப்ரவரி 28-ம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்த பெட்ரோல் பங்க்குகள் நேரக் கட்டுப்பாடின்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்படி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் என அனைத்து திரையரங்குகளும் நூறு சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சிக் கூடங்கள் செயல்படவும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.