திமுக சட்டத்துறை இரண்டாவது மாநில மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசுகையில், “அதிமுக பொதுக்குழுவில் பேசிய ஒரு சிலர் திமுகவை ஒழித்து விடுவோம், நசுக்கிவிடுவோம் என கூறியிருக்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் ஒன்றை நினைவுபடுத்த ஆசைப்படுகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழித்து விடுவேன் என்று சொன்னவர்கள் எல்லாம் கல்லறை கட்டிய கட்சி தான் தி.மு.க என்பதை மறந்துவிடாதீர்கள்..

திமுகவை மூட்டை பூச்சியை நசுக்குவது போல் நசுக்குவோம் என்றார் ராஜாஜி. அந்த ராஜாஜிக்கு மணிமண்டபம் கட்டியது திமுக என்பதை மறந்து விடக்கூடாது. திமுக காரர்களின் கட்டைவிரலை வெட்டுவோம் என்று பெருந்தலைவர் காமராஜர் சொன்னார். ஆனால் அவருக்கு தி.மு.க-தான் இறுதி மரியாதை வாங்கிக்கொடுத்தது. எம்.ஜி.ஆர் ஆவேசமாக பேசும்போது தி.மு.க-வை தடை செய்வேன் என்று பேசினார்.

அடுத்த நாள் காஞ்சிபுரத்தில் பேசிய கலைஞர் ‘எவண்டா அது தி.மு.க-வை தடை செய்வேன் என்று பேசியது’ எனக் கேட்டார். எம்ஜிஆர் திருச்சி மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கினார். அப்போது மயங்கி விழுந்தார். அப்பல்லோவுக்கு போனார். அடுத்ததாக அமெரிக்காவுக்கு போனார். கடைசியாக எம்ஜிஆர் பேசியது திமுகவை தடை செய்வேன் என்பது தான் என்பதை இபிஎஸ் மட்டும் ஓபிஎஸ்-க்கு தெரிவித்துக்கொள்கிறேன். அதன் பிறகு அவர் பேசாமலேயே போய் சேர்ந்துவிட்டார் என்பது அந்த கட்சி இருப்பவர்களுக்கு தெரியும்” என்றார்