“திமுகவையும், விசிகவையும் பிரிக்க இலவு காத்த கிளிபோல் காத்துக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் பாமகவுடன் தற்காலிகமாக கூட ஒருபோதும் விசிக கூட்டணி வைக்காது” என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக தோல்வி குறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கர்நாடகாவிலிருந்து பாஜகவை விரட்டியதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்துதான் மதவாத நச்சுக் கிருமிகளைத் தமிழ்நாட்டிலும் பிற அண்டை மாநிலங்களிலும் பரப்பி வந்தனர். இப்போது அந்த பேராபத்தின் தீவிரம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜகவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும்” எனத் தெரிவித்திருந்தார்.
திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் விசிக, வரும் 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்ற யூகங்கள் அரசியல் அரங்கில் இருந்து வரும் நிலையில், பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் இணையமாட்டோம் எனக் கூறியுள்ளார் திருமாவளவன்.