காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாமல்லன் நகர் ஆர்ச் அருகில் கருமாரியம்மன் கோவில் உள்ளது.இந்தக் கோவிலை வாசுதேவன் என்பவர் நிர்வாகம் செய்து வருகின்றார் .இங்கு ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்ய வருகின்றனர்.
குறிப்பாக வெள்ளிக்கிழமையில் பக்தர்கள்கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பூஜை நடைபெற்றது. இரவு 8.30 மணி அளவில் அர்ச்சகர் கோவிலை பூட்டி சென்றுள்ளார். காலை கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவிலின் முன்பக்க கேட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி வாசுதேவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அவர் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. தகவலறிந்து காஞ்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அந்த உண்டியலில் ரூபாய் 10 ஆயிரம் இருக்கலாம் என்று தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.