நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைகளுக்குமே புராண வரலாறு உண்டு. மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மனிதனின் மனதில் தூய்மையை ஏற்படுத்துவதும் இந்த பண்டிகைகளின் நோக்கமாக அமைந்திருக்கிறது. அதுபோன்றுதான் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கும் சில புராண வரலாறுகள் கூறப்படுகின்றன.
பகவான் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதாரம் செய்த சமயத்தில் ஆயர்பாடியில் தோழர்களுடனும், கோபியர்களுடனும் விளையாடிக்கொண்டிருந்தார். புல்லாங்குழலை ஊதியபடியே பசுக்களை மேய்த்து ஆனந்தம் கொண்டிருந்தார். பிருந்தாவனம் மக்கள் ஆண்டுதோறும் தங்கள் நிலங்களில் விளையக்கூடிய உணவு பொருட்களை எல்லாம் இந்திரனுக்கு படைத்து, அதை இந்திரா விழாவாக கொண்டாடுவது வழக்கம். மழையை பொழியவைப்பது இந்திரன் என்பதால் அவரை வழிபட வேண்டும் என்பது அந்த விழாவின் நோக்கமாக இருந்தது. இதனால் இந்திரனுக்கு சற்று ஆணவம் அதிகரித்தது. இந்திரனின் ஆணவத்தை அடக்க எண்ணிய கிருஷ்ணபகவான், நந்தகோபரிடத்தில் நமக்கு மழையை கொடுப்பது கோவர்த்தனகிரி மழைதான், எனவே நாம் இந்த முறை அந்த மலைக்கு பூஜைகளைச் செய்து மதி மகிழ்விப்போம் என்றார். தெய்வீகக்குழந்தையின் கூற்றுபடியே கோவர்த்தனகிரி பூஜைகளும், யாகங்களும் தொடங்கியது. இதனால் கோபமான இந்திரன் பிருந்தாவனத்தை நோக்கி வருண பகவானை ஏவி விட்டார். கடும் மழை பெய்ய வைத்தார்.
கலங்காத கண்ணன் கோவர்த்தனகிரி மலையைத் தன் சுண்டு விரலால் தூக்கி குடையாகப் பிடித்து மக்களை எல்லாம் காத்தார். மூன்று நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்தும் மக்களையும் பசுக்களையும் கிருஷ்ணர் கண் இமைபோல் காத்தார். இதை பார்த்த இந்திரனுக்கு மகாவிஷ்ணு தான் கிருஷ்ணராக அவதாரம் செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. இதையடுத்து ஆணவம் அழிந்த இந்திரன் கிருஷ்ணரை பணிந்து தஞ்சம் புகுந்தான். இந்த விழாதான் பொங்கல் பண்டிகைக்கு வித்திட்டது என்று கூறுகின்றனர்.
இயற்கைக்கு வழிபாடும், நன்றியும் செலுத்தும் பண்பும் பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. அதனால் தான் நாமே உழைத்து பொருட்களை விளைவித்தாலும், அதற்கு துணை புரிந்த சூரிய பகவானுக்கும், வருண பகவானுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதற்காக விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள்.
பொங்கலுக்கு அடுத்ததாக வரும் மாட்டுப் பொங்கல் விழாவிற்கும் நந்திதேவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். சிவபெருமான் ஒருமுறை தனது வாகனமான நந்தி தேவரை அழைத்து பூலோகம் செல்லும்படி கூறினார். பூலோகத்தில் உள்ள மக்களிடம் எல்லாம் தினமும் எண்ணை தேய்த்து குளித்து மாதம் ஒரு முறை உணவு உண்ணும்படி கூறவேண்டும் என்று நந்தி தேவரிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார் சிவபெருமான். ஆனால் நந்தி தேவார் அதை மறந்து தினமும் உண்ணும் படியும் மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கும் படியும் தவறாக மக்களிடம் கூறி விட்டார். இதனால் கோபமான சிவபெருமான் இனி பூமியில் உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் ஏற்படும், எனவே அவர்களுக்கு உணவை உற்பத்தி செய்வதற்காக நீ உதவி புரிய வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதனால்தான் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக எருதுகளும், காளைகளும் உள்ளன. விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தவும், பெருமை சேர்க்கும் விதமாகவும், பூஜித்து வணங்கும் விதமாகவும் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மொத்தத்தில் நம் நாட்டினுடைய பாரம்பரியம் என்பது இயற்கைக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் நன்றி செலுத்தும் விதமாக அமைந்துள்ளது. இயற்கை கடவுளுக்கு நிகரானது. இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல் அவற்றை போற்றி பாதுகாப்பது நமது கடமை என்று ஒவ்வொரு பண்டிகைகளும் நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கின்றன