கொரோனா நோய்த்தொற்றை தடுக்கும் கோவிட்ஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது. நேற்று முதல் இந்தியா முழுவதும் முன்கள பணியாளர்களான சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சில இடங்களில் கொரோனா நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிலர் இந்த தடுப்பூசி குறித்த வதந்திகளை பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், “மக்கள் அனைவரும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தடுப்பூசி ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. தடுப்பூசி தயார் செய்யும் இடத்திற்கு நேரில் சென்று பார்த்ததால், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.