தைப்பூச திருவிழா தமிழ்கடவுளான முருகப்பெருமானின் பிறந்த நாள் என பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. பழனி உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் முருகன் கோயில்களிலும் பக்தர்கள் காவடி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துகிறார்கள். தை மாதம் கொண்டாடப்படும் இந்த தைப்பூச விழாவிற்கு விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ் கடவுளான முருகப்பெருமானை சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமனது தைப்பூச திருவிழா. இவ்விழா தமிழ் நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் சென்றபோது , இலங்கை மொரீஷியஸ் போன்ற நாடுகளில் தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அளிப்பதுபோன்று, தமிழ்நாட்டிலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் 28-ம் தேதி தைப்பூச திருவிழா அன்று பொதுவிடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.