கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அனைத்து சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோக பறக்கும்படை அதிகாரிகளும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையெல்லாம் தாண்டியும் அவ்வப்போது கடத்தல் நடப்பதும், போலீஸார் துரத்தும்போது வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடுவதும் தொடர்கதையாக இருக்கிறது.

அந்தவகையில் இன்றுகாலையில் குமரிமாவட்டம், திட்டுவிளை பகுதியில் மினி டெம்போ ஒன்று அரிசி மூட்டைகளை சுமந்துவந்தது. ஒரு திருப்பத்தில் லாரி நிலைதடுமாறி கவிழ்ந்தது. உடனே லாரியை விட்டு இறங்கி டிரைவர் தப்பியோடிவிட்டார். இந்த லாரியை சோதனை செய்து பார்த்த போது அதில் 10 டன் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்திவருகின்றனர்.