புதிதாக உதயமாகியுள்ள தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி துவக்கி வைத்தார்.
நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தின் 38 ஆவது மாவட்டமாக உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கடந்த 24 மார்ச் 2020 ல் சட்டபேரவை விதி எண் 110ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தை உருவாக்கிட அரசாணை வெளியிடப்பட்டு மாவட்டத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு புதிய மாவட்டம் தோற்றுவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதை தொடர்ந்து புதிய மாவட்டம் இன்று 28 டிசம்பர் 2020 அன்று தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்ட புதிய மயிலாடுதுறை மாவட்டத்தை இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
புதிய மயிலாடுதுறை மாவட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறுவட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலவர் ஓ பன்னீர்செல்வம், கைத்தறி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன், வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார், தலைமைச் செயலாளர் க சண்முகம் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்