நடிகர் ரஜினிகாந்த் தொடங்க போவதாக கூறிய கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் ரஜினிகாந்தால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தனது உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என்றும் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் தமிழருவி மணியன் இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், கல்லூரி காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலடியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதாகவும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான அவரது அரசியல் வாழ்வு அப்பழுக்கற்றது என்றும் கூறியுள்ளார். எந்த நிலையிலும் தமிழருவி மணியன் யாரிடத்திலும் கையேந்தியதில்லை என்றும் இன்றும் வாடகை வீட்டிலேயே குடியிருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த மாற்று அரசியல் மலரவேண்டும், மக்கள் காமராஜர் ஆட்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்பதற்காக முயன்றதுதான் அவர் செய்த மிகப்பெரிய குற்றம் என்றும், இதனால் அவர் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களால் அவரது குடும்பத்தினர் மன உளச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் உலகில் தான் சாதிக்க ஒன்றும் இல்லை. என்னுடைய நேர்மையும், தூய்மையும், வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து நான் விலகி நிற்பதே விவேகமானது. எனவே இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்க மாட்டேன் என்று தனது அறிக்கையில் தமிழருவி மணியன் கூறியுள்ளார்