கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் மேயராக பொறுப்பேற்றதை தேசமே திரும்பிப் பார்த்தது. கல்லூரி மாணவியான இவர் மேயர் ஆனதை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அதே கேரளத்தில் இன்னொரு அதிசயமும் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக துப்புரவு பணி செய்து வந்தவர் ஆனந்தவல்லி. சி.பி.எம் கட்சி உறுப்பினரான ஆனந்தவல்லிக்கு பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் பத்தாவது வார்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது சி.பி.எம். கட்சி. அந்த வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் ஆனந்தவல்லி.
அந்த ஊராட்சி ஒன்றியத்தில் அதிக இடங்களை சி.பி.எம் கட்சி பெற்றது. இதைத் தொடர்ந்து பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்பாளராக ஆனந்தவல்லி போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். ஆனந்த வல்லியின் கணவர் பெயிண்டராக இருக்கிறார். இதுபற்றி கூறிய ஆனந்தவல்லி, “நான் தூய்மை பணி செய்த அலுவலகத்திலேயே சேர்மனாக பதவி ஏற்றது மகிழ்ச்சியாக உள்ளது. புதிய பொறுப்பால் கொஞ்சம் பதட்டமாக இருந்தேன். ஆனால் எனது கட்சி நிர்வாகிகள் எனக்கு நம்பிக்கை அளித்தனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தை முன்மாதிரியாக மாற்ற நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்றார்