சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட இருப்பதாக தகவல் வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணி சார்பில் ரெய்னா விளையாட இருந்தார். இதற்காக அவர் சிஎஸ்கே அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகமும் சென்றார். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட குடும்ப சிக்கல் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகினார். அவர் இல்லாத காரணத்தினால் சிஎஸ்கே, இந்த ஆண்டு ஐபிஎல்-ஐ மோசமாக விளையாடியது. அவர் இல்லாத வெற்றிடத்தை அனைவரும் உணர்ந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா, கட்டாயம் விளையாடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐபிஎல் தொடருக்கு முன்னோட்டமாக எதிர்வரும், பிசிசிஐ-யால் நடத்தப்படும் சயித் முஸ்தக் அலி டிராஃபியில் ரெய்னா உத்தர பிரதேச அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கு அவரே கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.
ரெய்னா கடைசியாக 2019 ஆம் ஆண்டுதான் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில்தான் சர்வதேச கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக, குடும்ப பிரச்சனை காரணமாகவும் மிகப் பெரிய பிரேக் விழுந்துவிட்டது. அதை சரிகட்டும் நோக்கில் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறார் ரெய்னா. சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.