டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி கடந்த மூன்றுவாரங்களாக போராடிவருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் தீர்வுகாணும்வகையில் உச்சநீதிமன்றம் குழு அமைக்க உள்ளது.
தலைநகர் டெல்லியில் தினமும் போராட்டம் நடப்பதால் வாகன ஓட்டிகள் செல்லவே சிரமப்படுவதாக சில பொதுநலவழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர், ‘விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அவர்களுக்கு எதிராக அரசு எந்த சட்டமும் இயற்றவில்லை’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அரசு பேசித்தான் போராட்டத்துக்கு தீர்வு கிடைக்கவில்லையே? பின்பும் பேசிக்கொண்டு இருப்பதாகவே கூறுகிறீர்களே?’ எனக்கேட்டார்.
உடனே அரசு வழக்கறிஞர்கள், ‘பேச்சுவார்த்தையில் விவசாயிகள் அதிகாரிகளுக்கு முகம் பார்த்து பேசாமல் முதுகைக்காட்டி அமர்கின்றனர். கூடவே, கையில் பதாகைகளையும் ஏந்துகின்றனர். இப்படி அவர்களின் செயலாலேயே இழுபறி ஆகிறது.’என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் மத்திய அரசு சார்பில் சிலர், விவசாயிகள் சிலர், தேசிய அளவில் இருக்கும் விவசாயிகள் சிலர் ஆகியோரைக் கொண்டு உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கும் என தெரிவித்தனர். மேலும் டெல்லிவாசிகளின் பொதுநலவழக்குகளுக்கு மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.