கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகின்றனர்.
மதசார்பற்றா ஜனதா தள கட்சியை சேர்ந்த தர்மே கவுடாவின் (64) உடல் சிக்மங்களூர் மாவட்டம் கடூர் தாலுகாவிலுள்ள குணசாகரா என்ற இடத்திலுள்ள ரயில் தண்டவாளத்திலிருந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
செவ்வாய் மாலை கவுடா தனது காரில் சகாராயபட்டண என்ற இடத்திலுள்ள தனது பண்ணைவீட்டிலிருந்து வெளியே சென்றார் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் பிணமாக ரயில் தண்டவாளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தர்மே கவுடாவிற்கு மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
காவல்துறையினர் முதல்கட்ட விசாரணைக்கு பிறகு தர்மே கவுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். அவரது உடல் சிமோகாவில் உள்ள மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தர்மே கவுடாவின் இறப்பு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவரது இறப்பு துர்திஷ்டவசமானது என கூறியுள்ளார். முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவருமான தேவே கவுடா அவரது இறப்பு மாநிலத்துக்கே பேரிழப்பு என குறிப்பிட்டுள்ளார்.