வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக மாநில பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 2021 பிப்ரவரி மாதத்துடன் நான்கு வருட தண்டனை காலம் முடிவடைகிறது. எனினும் நன்னடத்தை மற்றும் விடுமுறை ஆகியவற்றை கணக்கில் கொண்டு சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில் மூன்று பேரும் விசாரணை கைதிகளாக சிறையில் இருந்த நாட்கள் மற்றும் பரோலில் வெளியே வந்த நாட்கள் ஆகியவற்றை கணக்கிட்டு பார்க்கும் போது, சசிகலாவுக்கு முன்கூட்டியே இளவரசியும், சுதாகரனும் விடுதலையாகி வெளியே வர வாய்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சுதாகரன் தாக்கல் செய்த மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை சுட்டிக்காட்டி சுதாகரன் மனு அளித்திருந்தார். இதன் காரணமாக நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்புள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் சசிகலாவும் விரைவில் சிறையை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.