செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சங்கு மேட்டு தெருவில் அமைந்துள்ளது தண்டு மாரியம்மன் கோயில். சுமார் 75 வருடம் பழமையான இக்கோயிலின் பின்புறம் சுயம்புவாக உருவான பாம்பு புற்று உள்ளது. இந்த பாம்பு புற்றில் பக்தர்கள் முட்டை வைத்து வழிபடுவது வழக்கம். முட்டை வைத்து வழிபடும் பக்தர்களின் துன்பங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது. இந்த புற்றில் பாம்புகள் இருப்பதாகவும், அவை கோயிலுக்கு வரும் பக்தர்களையோ மற்றவர்களையோ தொந்தரவு செய்வதில்லை என கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு பின்புறம் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான இடம் உள்ளது.
இவர் கோயில் இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் மண்ணை சமன் செய்ததுடன், சுயம்புவாக தோன்றியிருந்த பாம்பு புற்றையும் இடித்துள்ளார். இதில் புற்றில் இருந்த ஒரு நாகப் பாம்பு இறந்துள்ளது. மேலும் மூன்று பாம்புகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இதுகுறித்து பக்தர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தி இடத்தின் உரிமையாளர் செந்தில் மற்றும் ஜே.சி.பி ஆப்பரேட்டர் ஜெய்சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜே.சி.பி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.