மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாயி சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 40 நாள்களுக்கும் மேலாக நடக்கும் இந்த போராட்டத்தில் ஏழு கட்ட பேச்சுவார்த்தை நடத்தும், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. அடுத்ததாக எட்டாவது கட்ட பேச்சுவார்த்தை வரும் 8-ம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் சிவசேன கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா-வில் மத்திய அரசை விமர்ச்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது.

அந்த கட்டுரையில், “டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் உயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள். ஏழு கட்ட பேச்சு வார்த்தை நடந்தும் தீர்வு எட்டப்படவில்லை என்றால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம். விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க வேண்டும், அதில் அரசியல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நினைக்கிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். வேளாண் திட்டங்களை உடனடியாக வாபஸ் பெற்று, விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும்” இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது