கன்னியாஸ்திரி அபையா கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (22 டிசம்பர் 2020) கன்னியாஸ்திரி அபையாவை கொன்றதாக அதே மடத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி செபி (55) மற்றும் பாதிரியார் தாமஸ் கொட்டூர் (69) ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் புதன் கிழமை அறிவிக்கப்படும்.
1992 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி அபையா என்பவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள புனித பியூஸ் கான்வெண்ட் விடுதியில் தங்கி கத்தோலிக்க சர்ச் நிர்வகிக்கும் ஒரு கல்லூரியில் ப்ரீ டிகிரி வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 1992 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அதே விடுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி அபையா இறந்த நிலையில் கண்டு எடுக்கப்பட்டார்.
இது தொடர்பாக முதலில் விசாரணை செய்த உள்ளூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் எனக் வழக்கு பதிந்தனர். அதன்பின்னர் மாநில குற்றப் பிரிவு காவல்துறையினர் விசாரணையை துவங்கி 1993 ஆம் ஆண்டு கன்னியாஸ்திரி அபையா தற்கொலை செய்துக் கொண்டதாக கூறினார்.
கன்னியாஸ்திரி அபையா மர்ம மரணம் நடந்து சுமார் ஒரு வருடம் கழித்து 65 கன்னியாஸ்திரிகள் சேர்ந்து இறந்த அபையாவின் வழக்கை சிபிஐ யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அப்போதைய கேரள முதல்வர் கருணாகரனிடம் கொடுத்த கோரிக்கையின் அடிப்படையில் விசாரணை சிபிஐ யிடம் ஒப்படைக்கப்பட்டது.
1993, மார்ச் மாதத்தில் விசாரணையை துவங்கிய சிபிஐ கன்னியா
ஸ்திரி அபையா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது குறித்து தங்களால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் சிபிஐ வேறு அதிகாரிகளைக் கொண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரித்தது.
இரண்டாவது முறை சிபிஐ தனது அறிக்கையில் கன்னியாஸ்திரி அபையா கொல்லப்பட்டதாகவும் ஆனால் கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் வழக்கை முடித்து வைக்கவும் நீதிமன்றத்தில் கூறியது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் சிபிஐ மீண்டும் ஒரு முறை விசாரணை நடத்தியது.
மூன்றாவது முறை அபையாவை கொன்ற குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் வழக்கை முடித்து வைக்க நீதிமன்றத்தில் சிபிஐ வேண்டியது. இந்நிலையில் செப்டம்பர் 2008 ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐயின் புதுதில்லி கிளையிலிருந்து கேரள மாநிலம் கொச்சி கிளைக்கு மாற்றப்பட்டது. மேலும் மூன்று மாதங்களுக்குள் வழக்கு விசாரணையை முடிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த முறை விசாரணை நடத்திய சிபிஐ அதே கான்வெண்ட் விடுதியில் இருந்த மற்றொரு கன்னியாஸ்திரியான செபி மற்றும் பாதிரியார்களான தாமஸ் கொட்டூர் மற்றும் புத்திரிகாயல் ஆகியோரை கைது செய்தது. கன்னியாஸ்திரி செபிக்கு குறிப்பிட்ட இரண்டு பாதிரியார்களுடன் தவறான உறவு இருந்துள்ளது. கன்னியாஸ்திரி அபையா கொல்லப்பட்ட அன்று அதிகாலை அந்த விடுதியில் உள்ள சமையலறைக்கு தண்ணீர் அருந்த சென்றுள்ளார். அப்போது கன்னியாஸ்திரி செபி அந்த இரண்டு பாதிரியார்களுடன் தனிமையில் இருந்ததை அபையா பார்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியே கூறி விடுவார் என பயந்த பாதிரியார் தாமஸ் கொட்டூர் கன்னியாஸ்திரி அபையாவை கழுத்தை நெறித்தும் கன்னியாஸ்திரி செபி அங்கு கிடந்த ஒரு கோடாரியை வைத்து அடித்தும் அபையாவை கொன்றுள்ளனர். கன்னியாஸ்திரி அபையா கொல்லப்பட்ட பிறகு அவரது உடலை கிணற்றில் வீசியுள்ளனர் என சிபிஐ தனது விசாரணையில் கண்டுபிடித்தது.
இது தொடர்பாக சிபிஐ தனது குற்றபத்திரிகையை 17 ஜூலை 2009 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. வழக்கு விசாரணைக்கு பிறகு தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட கன்னியாஸ்திரி செபி மற்றும் பாதிரியார் தாமஸ் கொட்டூர் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் புதன் கிழமை அறிவிக்கப்படுகிறது.