நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவருக்கும் கொடுக்கும் அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரும் எண்ணம் ஏற்படக்கூடாது எனக் கூறினார்.
நடிகர் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு இந்த தேர்தலில் கிடைக்கும் அடியில் இனி எந்த நடிகருக்கும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்படக் கூடாது. நடிப்பது மட்டுமே நாட்டை ஆள்வதற்கான தகுதி என்பதை இத்தோடு ஒழிக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசும் போது சீமான் குறிப்பிட்டார்.
தமிழகத்தை வழி நடத்த இங்கு தகுதி வாய்ந்த ஒருவர் கூடவா இல்லை, தமிழகத்தை வழி நடத்த மஹாராஷ்டிராவில் இருந்துதான் ஒருவர் வரவேண்டுமா என கேள்வி எழுப்பினார். ரஜினி சினிமாவில் இன்னும் 10 ஆண்டுகள் வேண்டுமானாலும் கதாநாயகன் வேடமிட்டு நடிக்கட்டும் அதை நாங்கள் விமர்சிக்கவில்லை என்றார்.
தானும் சினிமா துறையிலிருந்துதான் அரசியலுக்கு வந்ததாகவும், ஆனால் ரஜினி கமலை போல ரசிகர்களை சந்திக்கவில்லை என்றும் மக்களை சந்தித்து தான் அரசியலுக்கு வந்ததாகவும், எனவே ரஜினி- கமலுடன் சீமானை ஒப்பிடக் கூடாது என்றார்.
ரஜினி-கமல் ஆகியோர் அரசியலுக்கு வருவது, வீரம், மானம், அறம் இவை மூன்றும் உயிர் என்று வாழ்ந்த ஒரு இனத்துக்கு தன்மான இழப்பாக பெருத்த அவமானமாக பார்கிறோம் என்றார்.
ரஜினி, கமல் ஆகிய இருவரும் எம்ஜிஆரை பற்றி தங்கள் பேச்சில் குறிப்பிடுகின்றனர். கமல், ரஜினி இருவரும் எம்ஜிஆர் குறித்து பேசுவது இரட்டை இலைக்கு தான் சாதகமாக மாறும் என்று சீமான் குறிப்பிட்டார்.