சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
நாட்டு மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை வழங்குவதில் பட்டத்து இளவரசருக்கு உள்ள ஆர்வத்தையும் தொடர் முயற்சியையும், சவுதி அரேபியாவின் சுகாதாரத் துறை அமைச்சரான மருத்துவர் தவ்பிக் அல் ரபியா வெகுவாகப் பாராட்டினார்.
முன்னதாக பைசர் மற்றும் பயான்டெக் நிறுவனங்கள் உருவாக்கிய கரோனா தடுப்பு மருத்துக்கள் கடந்த மாதம் சவுதி அரேபியாவை சென்றடைந்த நிலையில் இளவரசர் தடுப்பு ஊசியை போட்டுக்கொண்டுள்ளார்.
அந்நாட்டு சுகாதரத்துறை கணக்குகளின்படி 3,61,903 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,52,815 பேர் சிகிச்சைக்கு பின்னர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதே போல் 6,168 பேர் கோவிட் 19 தொடர்பான சிக்கல்களால் இறந்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில உலகத் தலைவர்களில் இளவரசர் முகமது பின் சல்மானும் ஒருவர். கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது தொலைகாட்சியில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டது. முன்னதாக இந்த வாரம் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனும் கரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்