சசிகலா வரும் 27 ஆம் தேதி கர்நாடகா மாநில பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வருவதை அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் உறுதிசெய்துள்ளார். முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஜெயலலிதாவுக்கு 100 கோடி அபராதமும், மற்ற மூவருக்கும் 10 கோடியே 10 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
கூடவே அபராதத்தைக் கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு கூறப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி சிறைக்குச் சென்றார் சசிகலா. அந்தவகையில் அவரது தண்டனைக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தான் தண்டனைக்காலம் முடிகிறது. சிறைவிதிகளைக் காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிக்கை மனு கொடுத்தார். நிலுவையில் இருந்த அந்த மனு, இப்போது அவருக்கு 27 ஆம் தேதி விடுதலையைத் தந்திருக்கிறது. சசிகலா ஏற்கனவே அபராதத் தொகையைக் கட்டிவிட்ட நிலையில் அவரது விடுதலை செய்தியை அவரது வழக்கறிஞர் உறுதிசெய்துள்ளார். இதேவழக்கில் கைதான இளவரசி பிப்ரவரி 5 ஆம் தேதி விடுதலையாவார் எனவும் தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலைக்குப் பின்னால் அதிமுகவுக்குள் குழப்பம் ஏற்படும் வாய்ப்பிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட சிலர் சின்னம்மா என்றே விழித்துவருகின்றனர். ஆனால் ஜெயக்குமாரோ சசிகலாவை கடுமையாக விமர்சித்துவருகிறார். இதனிடையே டெல்லிக்கு போய் இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி. அரசு முறை பயணமாக அவர் சென்று இருந்தாலும் திரைமறைவில் பாஜக அரசியல் காய் நகர்த்தலுக்காக அவரை அழைத்ததாகவே கூறப்படுகிறது. அதாவது சசிகலா தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும், அமமுக_அதிமுக இணைந்தால் மட்டுமே திமுகவை எதிர்கொள்ள முடியும் என்றும் பாஜக கணிக்கிறதாம்.
சசிகலா லேசாக கட்சிக்குள் நுழைந்தாலும் தன் அஸ்திவாரத்தையே அசைத்துவிடுவார் என்பதை புரிந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஸ்ரிக்டாக நோ சொல்லிவிட்டாராம். கூடவே டெல்லியில் சசிகலா குறித்த கேள்விக்கு, அவரை அதிமுகவில் ஏற்றுக்கொள்ள 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை. சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்பட போவது இல்லை.’’என்கிறார். ஏற்கனவே ஓ.பி.எஸ்_ஈ.பி.எஸ் இடையே திரைமறைவில் யுத்தம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் சசிகலாவின் விடுதலை அதிமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.