தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க கட்சியையும், தமிழக முதல்வர் பதவியையும் கைப்பற்ற திட்டமிட்டார். அந்த சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகி தண்டனை கிடைத்ததால் பெங்களூர் சிறைக்குச் சென்றார் சசிகலா. அதே சமயம் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அவர் சிறைக்குச் சென்றதும் அ.தி.மு.க-வில் காட்சிகள் மாறின. சசிகலா அ.தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் சசிகலாவின் உறவினர் டி.டி.வி தினகரன் சசிகலாவை பொதுச்செயலாளராகக் கொண்டு அ.ம.மு.க என்ற கட்சியை தொடங்கினார்.
இந்த நிலையில் சிறைத்தண்டனை முடிந்து கடந்த 27-ம் தேதி விடுவிக்கப்பட்டார் சசிகலா. அதே சமயம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா அ.தி.மு.க கொடி கட்டிய காரில் புறப்பட்டுச் சென்றார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனாலும் சில நாட்கள் தனிமையாக ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவித்துள்ளதால் பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி 10-ம் தேதிவாக்கில் சென்னை திரும்பப்வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல் ஆட்டத்திலேயே காரில் அ.தி.மு.க கொடி கட்டி பரபரப்பை கிளப்பியிருக்கிறார் சசிகலா. ஒரு கட்சியில் இல்லாதவர்கள் அந்த கட்சியின் கொடியை காரில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம். அப்படி இருந்தும் சசிகலா காரில் அ.தி.மு.க கொடி கட்டியிருக்கிறார் என்றால் இன்னும் அ.தி.மு.க-வில் இருப்பதாக தன்னை காட்டிக்கொள்ளும் செயல் என்கிறார்கள்.
இந்த நிலையில் அ.தி.மு.க கொடி கட்டிய சசிகலாவின் செயலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். “அ.தி.மு.க கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது’ எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசி வெளியே வந்த அடுத்த நொடியே அரசியல் களத்தில் பரபரப்பை பற்ற வைத்துள்ளார்.