புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சந்நிதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். ஞாயிற்று கிழமை (27 டிசம்பர்) அதிகாலை 5.22 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
வழக்கமாக சனிப்பெயர்ச்சியின் போது திருநள்ளாறு கோவிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க லட்சகணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கரோனா காரணமாக இந்த ஆண்டு பெயர்ச்சியின் போது அன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கரோனா பரிசோதனை செய்து நெக்டிவ் என்ற சான்றிதழோடு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.
வழக்கமாக பக்தர்களின் வசதிக்காக விடப்படும் சிறப்பு பேருந்துகள், கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் ஆகியவை இந்த வருடம் கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலில் உள்ள நளன் தீர்த்த குளத்திலும் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை.
இந்நிலையில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி தங்க காக வாகனத்தில் காட்சியளித்து வருகிறார். நாளை காலை பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு அபிஷகம் மற்றும் சிறப்பு தீபாரதனை ஆகியவை நடைபெறும்.
இதுவரை சனிப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்ள 17 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.