மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பலவித கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் தற்போது 1,000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தினமும் 10,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி பல அமைப்புகளும் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. ஆனால் அதிகப்படியான பகதர்களை அனுமதித்தால் கொரோனா நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அரசு தனது அச்சத்தை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் அதிகப்படியான பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கொரோனா பரவல் தடுப்புக்கான உயர்மட்ட குழு முடிவு எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. இத்துடன் பக்தர்கள் சபரிமலை வருவதற்கு 48 மணிநேரம் முன்பாக கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பிசிஆர் (RT-PCR) பரிசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தனது உத்தரவில் கூறியுள்ளது.
மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26 ஆம் தேதிக்கு பின்னர் (டிசம்பர் 27 ஆம் தேதி முதல்) சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சபரிமலையில் பணியமர்த்தப்படும் அலுவலர்களும் பிசிஆர் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகிறது