கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் மண்டல மகரவிளக்கு காலத்தில் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். தொடக்க்கத்தில் தினமும் ஆயிரம் பக்தர்களும், பின்னர் படிப்படியாக இரண்டாயிரம், ஐந்தாயிரம் என பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. இதனால் சபரிமலையில் காணிக்கை, பிரசாத விற்பனை என வருமானங்கள் சரிந்தன. கடந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலையின் 269.17 கோடி ரூபாய் வருவாய் தேவசம்போர்டுக்கு கிடைத்தது.
ஆனால் இந்த ஆண்டு 21.17 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்திருக்கிறது. அதேசமயம் சபரிமலை தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள 1248 கோயில்களுக்கு மாத சம்பளம் மற்றும் இதர கோவில்கள் பராமரிப்பிற்காக மட்டும் 40 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எனவே கோயில் வருவாயை பெருக்க வசதியான பக்தர்களிடம் உதவி கேட்கவும், கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய உபய பொருட்களை வங்கிகளில் வைத்து கடன் பெறவும் ஆலோசித்து வருவதாக தேவசம் போர்டு தலைவர் வாசு தெரிவித்துளார்.