ஆர்டிஜிஎஸ் மூலம் பணம் அனுப்பும் வசதியை 24/7 மணிநேர சேவையாக மாற்றியுள்ளது ரிசர்வ் வங்கி. அதிக அளவு பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் இது இனிப்பான செய்திதான். வங்கிகளுக்கு நேரில் தான் சென்று கொண்டிருந்தோம். கால்கடுக்க காத்துநின்று கொண்டிருந்தோம். பாஸ்புக்கில் எண்ட்ரி போட புத்தகத்தை நீட்டுவோம். வங்கி அதிகாரியின் கையிலும், நம் கையிலுமாக அது கடப்பதாலேயே ‘பாஸ்புக்’ எனப்பெயர் வந்ததாகச் சொல்வார்கள். தொடர்ந்து வங்கிகள் கணினி மயமாக்கப்பட்டது. பாஸ்புக்களில் கையில் எழுதும் காலம் மலையேறிப்போய் இணையவழியில் எண்ட்ரி போட்டோம். நெட் பேக்கிங் முறை அமலுக்கு வர, நம்மில் பலரும் நேரடியாக வங்கிகளுக்கு சென்றே வருடக்கணக்கில் ஆகிறது. நொடிப்பொழுதில் வீட்டில் இருந்தவாறே, நெட்பேக் ஐடியை லாக்கின் செய்து பணம் டிரான்ஸ்பர் செய்து கொள்கிறோம். ஏ.டி.எம் இயந்திரங்களிலேயே இப்போது கணக்கில் பணம் போடும் வசதியும் வந்துவிட்டது. இப்படி வங்கித்துறை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து வளர்ச்சியடைந்துதான் வருகிறது. அந்தவகையில் அதன் அடுத்த பாய்ச்சலாக, ‘ஆர்டிஜிஎஸ் சேவை’யை 24 மணிநேரமும் செயல்படுத்த இருக்கிறது ரிசர்வ் வங்கி. அது என்ன ஆர்டிஜிஎஸ்? ரியல் டைம் கிராஸ் செட்டில்மெண்ட் சிஸ்டம் என்பதன் சுருக்கமே ஆர்டிஜிஎஸ். பொதுவாக குறைந்த அளவிலான பணப்பரிவர்த்தனைக்கு நெப்ட் எனப்படும் NEFT சேவையை பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான பணப்பரிவர்த்தனைக்கு ஆர்.டி.ஜி.எஸ் பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த சேவையானது காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. இனி இந்த சேவை 24 மணிநேரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட அர்.டி.ஜி.எஸ் சேவையில் இப்போது நாள் ஒன்றுக்கு 6.35 லட்சம் பரிவர்த்தனைகள் நடப்பதாக ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. தினமும் 4.17 லட்சம் கோடி ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகள் இந்த சேவை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.