ஆந்திரா மாநிலத்தில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருக்கிறார். இங்கு 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சிக்கு வந்தால் ரேசன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை கொண்டு வருவேன் என ஜெகன்மோகன் ரெட்டி வாக்குறுதி அளித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது.
அதற்கான தொடக்கவிழா நேற்று நடந்தது. இதுகுறித்து ஆந்திரா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வீடுகளுக்கு நேடியாக சென்று டெலி வரி செய்யும் திட்டம் வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 2,500 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ. 539 கோடியில் 9,260 நடமாடும் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் தரமான அரிசி உள்ளிட்ட ரேசன் பொருட்கள் வீடுகள் தோறும் நேரடியாக விநியோகிகப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் 5 கோடியே 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேசன் கார்டு தாரர்கள் பயனடைவர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.