ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்று கடந்த டிசம்பர் மாதம் 3-ம் தேதி ட்விட்டரில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றினார் ரஜினிகாந்த்.

இந்தநிலையில் ஹைதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி மூன்று பக்க அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த் தனது உடல்நிலையை காரணம் காட்டி கட்சி தொடங்கப்போவதில்லை என்று பிரகடனம் செய்தார். இது அவரது ரசிகர்களையும், ரஜினி மக்கள் மன்றத்தினரையும் அதிர்ச்சியடைய செய்தது. மேலும் ரஜினியின் அரசியல் முழுக்கு அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்ச்சித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற தனது முடிவை மாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் அறிக்கை வெளியிட்டபோதும் அதை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கானோர் வள்ளுவர்கோட்டத்தில் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி அளித்திருந்தது. அஜித் மற்றும் விஜய் ரசிகர் மன்றங்கள் சார்பில் ஆர்ப்பாட்ட களத்தில் பேனர்களை ரசிகர்கள் பிடித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ரஜினி ரசிகர்கள்
“இல்ல இல்லைன்னா எப்பவும் இல்லை” ”வா தலைவா வா” ”அரசியலுக்கு வாங்க தலைவா” ”முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் தலைவா” ”ஆட்சி மாற்றம்… அரசியல் மாற்றம்… மாற்றுவோம் மாற்றுவோம் எல்லாத்தையும் மாற்றுவோம்” என கோஷம் எழுப்பினர். இது ஒருபுறம் இருக்க அரசியலுக்கு வாங்க ரஜினி என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.