ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில், உடல் நிலையை காரணம்காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என திடீரென அறிவித்தார். அதேநேரம் ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் எனவும் அறிவித்துள்ளார். ரஜினியின் அறிவிப்பால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள அதிருப்தி நிர்வாகிகள் சிலர் ரகசிய மீட்டிங் போட்டு பேசியுள்ளனர். அதில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 10-ம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்துள்ளனர். இது எப்படியோ வெளியே கசிந்துள்ளது.
இதையடுத்து, “உடல்நலம் கருதி தற்போது அரசியலுக்கு வரவிலை என ரஜினி அறிவித்துள்ளார். எனவே மறு அறிவிப்பு வரும்வரை அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை மன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை” என தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
மேலும் வடசென்னை மாவட்ட செயலர் சந்தானம் தனது அறிக்கையில், ‘ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை எதிர்த்து 10ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுள்ளனர். அதில் நம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் யாரும் பங்கேற்க வேண்டாம். மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.