சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்களின் 25 வருட காத்திருப்புக்கு விடை கிடைத்துவிட்டது. ஒருவழியாக அரசியலுக்கு வருவதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. ’’இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை’’ என ரஜினி சொன்ன வார்த்தைகளை டிரெண்டாக்கி அவரது கட்சியின் பெயர், கூட்டத்துக்காக காத்திருக்கிறது பெரும்கூட்டம்.
ரஜினி இப்போது அண்ணாத்த படத்தின் சூட்டிங்கில் இருந்தாலும் மற்றொருபுறத்தில் அரசியல் கட்சிப்பணிகளையும் தீவிரமாக செயல்படுத்திவருகிறார். அண்மையில் தனது புதிய கட்சி பற்றி அறிவித்த ரஜினிகாந்த் டிசம்பர் 31ம் தேதி கட்சியின் பெயர் அறிவிக்கப்படும். ஜனவரியில் கட்சி துவங்கப்படும் எனவும் சொல்லியிருந்தார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் கட்சிக்கு ‘மக்கள் சேவை கட்சி’ என பெயர் வைத்திருப்பதாகவும், அந்த பெயரையே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் சின்னமாக தான் பாபா படத்தில் பயன்படுத்திய முத்திரையைக் கேட்டாராம் ரஜினி. ஆனால் தேர்தல் ஆணையமோ அவருக்கு ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்புறமென்ன…நான் ஆட்டோக்காரன்..ஆட்டோக்காரன் பாட்டை தட்டிவிட்டு பிரச்சாரத்தை தொடங்க வேண்டியதுதான்.