ரஜினிகாந்த் தற்போது ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்தம் மாறுபாட்டின் காரணமாக, இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரம் கூறுகிறது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற பட்டிமன்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் சார்பில் சொல்லப்பட்டதாக ஓர் அறிக்கை சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பைக் ஏற்படுத்தியது. அதில் சொல்லப்பட்ட ஒரு விஷயம் தான் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘ரஜினிக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது’ என்பதே அந்தத் தகவல்.
அந்த அறிக்கை தன் மூலமாக வெளியாகவில்லை என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துவ செய்திகள் அனைத்தும் உண்மையே என்று அவர் தெரிவித்திருந்தார். இது அவரின் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை உள்ளாக்கியது. ஆனாலும் ரசிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் சிலநாள்களுக்கு முன்பு அறிவித்தார். தொடந்து பெங்களூருக்குப் போய் தன் அண்ணனிடம் ஆசிபெற்றுவிட்டு, ஐதராபாத்தில் அண்ணாத்தே படத்தின் சூட்டிங்கிற்குப் போனார். ஆனால் அங்கு திடீரெஅ யூனிட்டில் சிலருக்கு கரோனா வர படப்பிடிப்பும் ரத்தானது. தொடர்ந்து ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு தென்பட ஹைதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ரஜினி.
இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் மீண்டும் ஓர் அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ரஜினியின் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. ரத்த அழுத்தம் மாறுபாடு தொடர்பாக கவனித்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும் கூறப்பட்டிருக்கிறது. ரஜினிக்கு மருத்துவமனையில் நாளை வரை அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றே தெரிய வருகிறது. அவரின் உடல்நிலை சீராக இருக்கின்றது என்கிற தகவலே அவரின் ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.