நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் 25 ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். அவரும் அரசியல் கட்சி துவங்க நாள் குறித்து இருந்தார். இந்நிலையில் ஹைதராபாத்தில் அண்ணாத்தே சூட்டிங்கிற்குப் போனவர் திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோவில் சிகிட்சைக்கு சேர்ந்தார். ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிட்சை செய்திருக்கும் ரஜினிக்கு மாறுபட்ட ரத்த அழுத்தம் இருக்கவே அரசியல் கட்சி துவங்கும் முடிவில் இருந்து பின்வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்திருந்தார். அவரது ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டு கடிதம் எழுதினார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினி வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டு ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

இதற்கிடையே சென்னை ஐயப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் முருகேசன்(55) என்பவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்தார். போலீஸார் அவரை தடுத்து மீட்டனர். மேலும் ரசிகர்களால் பிரச்னை ஏற்படாமல் இருக்க ரஜினி வீட்டு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது