ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு செய்தார். வரும் 31ம் தேதி கட்சியின் பெயரை சொல்வதாக ரஜினி அறிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினி கட்சியின் பெயர் மக்கள் சேவைக் கட்சி எனவும், அவரது சின்னம் ஆட்டோ எனவும் ஒரு தகவல் உலாவருகிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த பட சூட்டிங்கில் இப்போது இருக்கும் ரஜினி, தன் கட்சி நிர்வாகிகள் பணம் வாங்கிக்கொண்டு கட்சியில் பொறுப்பு போட்டுக் கொடுப்பது பற்றித் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இப்போது ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் அர்ஜூன மூர்த்தியும், தமிழறிவி மணியனும் சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்துவருகின்றனர். அதில், ‘பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தை விரைந்து முடிக்கவேண்டும்.
அந்த பட்டியலை வரும் 30ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். நிர்வாகிகள் நியமனத்துக்கு யாரிடமும் பணம் பெறக்கூடாது. அப்படி பணம் வாங்கியது தெரியவந்தால் கட்சியில் இருந்து உடனே நீக்கம் செய்யப்படுவார்கள். பணம் கொடுத்து ஓட்டு கேட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில் ஊழலை ஒழிக்கத்தான் கட்சி தொடங்குகிறோம்.’எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.