வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள்.போராட்டம் நடத்தி வருகின்றனர். 11 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த மாதம் 26-ம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் கலவரம் வெடித்தது. இதையடுத்து போராட்டத்துக்காக விவசாயிகள் மீண்டும் டில்லிக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக காசிப்பூர் எல்லையிலும், சிங்கு மற்றும் திக்ரி பகுதிகளில் சிமெண்ட் தடுப்புகள், கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தகைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வரும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் “சுவர்களை கட்டாதீர்கள், பாலங்களைக் கட்டுங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.