முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். வரும் 27-ம் தேதி விடுதலை ஆகும் நிலையில் அவருக்கு tதிடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 19ம் தேதி அவர் சிவாஜி நகரில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மூச்சுத்திணறல் அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் சசிகலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நுரையீரலில் தொற்று இருப்பது சிடி ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதுடன், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. 27 ஆம் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு 1000 கார்களில் போய் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் டிடிவி தினகரன் தலைமையில் தயார் ஆகிவந்தனர். இப்போது சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் 27ஆம் தேதிக்குள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டால் மட்டுமே சிறையில் இருந்து விடப்படும் சூழல் இருக்கிறது.