முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். சுமார் 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என தமிழ் அமைப்புகளும், தி.மு.க உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் எழுவரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
அந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் விடுதலை செய்யக்கேட்டு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், பேரறிவாளனை விடுதலை செய்வது பற்றி குடியரசுத்தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆளுநர் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது. தங்கள் விடுதலையை ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது ஆளுநர்தான் என்றும் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.