கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கை இப்போது சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு முன் சி.பி.சி.ஐ.டி போலீஸார் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரை 2019-ம் ஆண்டு கைது செய்தனர். புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் ‘பார்’ நாகராஜ் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ மேலும் மூவரை கைது செய்துள்ளது. பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகே சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பாபு என்ற ‘பைக்’ பாபு (27), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரையும் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இதில் அருளானந்தம் அ.தி.மு.க பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.