தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கும் பா.ம.கவை அதிமுக கூட்டணியில் இருந்து கழட்டி விட முயற்சிப்பதாக கிடைத்திருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலோடு 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது அதிமுக தலைமையிலான அணியில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலில் அதிமுக அணி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருதொகுதியில் மட்டும்தான் வெற்றிபெற்றது. அதுவும் ஒ.பி.எஸின் மகன் மட்டுமே ஜெயித்தார். மற்ற 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி மிக எளிதாக வென்றது. ஆனால் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொருத்தவரை பாமகாவுக்கு செல்வாக்கு உள்ள வடதமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி 7 தொகுதிகளில் தோல்வியடைந்தது.
இந்த கணக்குகளை வைத்துப் பார்க்கும் போது பாமகவை அதிமுக கூட்டணியில் வைத்துக் கொள்வதால் எந்த லாபமும் இல்லை. பாமகவுக்கு வன்னியர் சமுதாய மக்களிடமே ஆதரவு குறைந்து வருவதால் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாமகவை அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அதிமுக வில் ஒரு பிரிவினர் போர் கொடி தூக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலாக மாநிலம் முழுவதும் கட்சி அமைப்பு பலமாக உள்ள தேமுதிகவுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்களை கொடுக்கலாம் என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் பாமகவினர் சென்னையில் நடத்திய போராட்டத்தால் பொதுமக்களிடம் பாமகவுக்கு எதிரான மனநிலை தான் உள்ளது. எனவே பாமகவை நமது கூட்டணியில் வைத்தால் அது நமது வெற்றியை பாதிக்குமா என்று அதிமுக தரப்பில் யோசனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சர்வே எடுக்கவும் அதிமுக முடிவு செய்துள்ளதாம்.