கோ ஏர் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் மூத்த பைலட்டாக பணிபுரிந்து வந்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை இழிவான வார்த்தைகளால் விமர்ச்சித்து பதிவு செய்துள்ளார். சர்ச்சை எழுந்ததும் உடனடியாக அந்த பதிவை நீக்கிய மூத்த பைலட், தனது ட்விட்டர் பக்கத்தை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி லாக் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் குறித்து இழிவான கருத்து பதிவிட்ட சீனியர் பைலட்டை கோ ஏர் நிறுவனம் பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது.
நிறுவனத்தின் வேலை வாய்ப்பு விதிகள் மற்றும் ஒழுங்கு முறைக்கு இணங்கி நடக்க வேண்டியது அனைத்து ஊழியர்களின் கடமை ஆகும் என கருத்து தெரிவித்துள்ளது கோ ஏர் நிறுவனம். அதுமட்டுமல்லாது ஊழியர்களின் தனிப்பட்ட கருத்துகளுக்கு நிறுவனம் ஒருபோதும் பொறுப்பு ஏற்க முடியாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.