திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் திமுக ஆட்சியை கொண்டுவர தீவிர களப்பணியாற்றி வருகிறார். பிரசாந்த் கிஷோர் தலைமையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பெரும்படையே அவருக்காக வேலைசெய்து கொண்டிருக்கிறது. அவரும் விக் தலை, சைக்கிளில் ரவுண்ட் என செம யூத்புல்லாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். கருணாநிதி உயிரோடு இருந்தவரை மூடநம்பிக்கைக்கு எதிரான மனநிலை என காட்டிக்கொண்டே திமுகவுக்குள் தீவிர இந்துத்துவ சிந்தனைக்கு எதிரான ஒரு போக்கு இருந்தது. மத்தியில் பாஜக அரசின் தொடர்வெற்றி, இந்தியா முழுவதும் பரவலாக இந்து அமைப்புகள் உருவாக்கியிருக்கும் மதப்பிடிப்பாளர்கள் ஆகியவற்றால் திமுக முகாமே தன்னை மறுபரிசீலனை செய்து கொள்ளவேண்டிய நெருக்கடி நிலவுகிறது.
தமிழகத்தை பெரியார் மண் என திக, திமுக கட்சியினரும், இது ஆன்மீக மண் என இந்து இயக்கங்களும் சமகாலமாகக் குரல் கொடுத்துவருகின்றன. திமுக பெரியாருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆனால் உண்மையில் ஸ்டாலின் பெரியார் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு தன் சுய வாழ்வில் பொருத்தியிருக்கிறாரா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி. இப்படியான சூழலில் தான் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஸ்டாலின் பெரியார் கொள்கைகளை பின்பற்றுபவர் என்றால் முதலில் அவரது பெயரை ஸ்டாலின் என்பதற்குப் பதில் சுடாலின் என எழுதவேண்டும். பெரியார் சொன்ன தமிழ் சீர்திருத்தத்தை கடைபிடிக்க வேண்டும்.’எனவும் சொல்லியிருக்கிறார்.
திமுகவில் குறிப்பாக ஸ்டாலினின் மன ஓட்டம் அறிந்த சில மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். ‘ஸ்டாலின் அரசியலுக்காகவே மதநம்பிக்கை தளத்தில் இருந்து விலகியிருக்க வேண்டிய சூழலில் உள்ளார். அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தீவிரமான சாய்பாபா பக்தர். ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு செல்லும்போது இவர் உடன் சென்றால் அந்த பகுதிகளில் இருக்கும் கோயில்களுக்கு செல்லாமல் இருப்பதில்லை. வீட்டுக்குள்ளேயே ஸ்டாலினிடம், பெரியாரிசம் தோற்றுப் போன ஒன்று.
இன்னொன்று இந்துப்பண்டிகைகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து சொல்லமாட்டார். இதை கொஞ்சம் நுட்பமாக நீங்கள் அணுகவேண்டும். பெரியார் வட இந்திய வரவான மண் பிள்ளையாரை போட்டு உடைத்தாரே தவிர, இங்கே இயல்பாகவே இருக்கும் கல் பிள்ளையார் விக்கிரகங்களை உடைக்கவில்லை. ஏன், ஆரம்பகாலத்தில் அவரே பிள்ளையார் கோயில் ஒன்றில் தர்மகர்த்தாவாகவே இருந்தவர்தான். குலசாமி கோயில் வழிபாட்டையெல்லாம் அவர் டச் செய்யவே இல்லை. ஆனால் ஸ்டாலினுக்கு தெரிந்த கடவுள் மறுப்பு என்பது இந்துக்களின் நம்பிக்கை மீது கட்டி எழுப்பப்பட்டதாகவே உணரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக வேண்டும் என்பது காந்தியின் கொள்கை. காந்தியின் அழைப்பை ஏற்று வட இந்தியர்கள் வேறு வருமானத்தைத் தரமுடியாத தங்கள் தோட்டத்து ஈச்சமரத்தை வெட்டினார்கள். ஆனால் பெரியார் தன் தோட்டத்து தென்னைமரங்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது அந்த பகுதியில் தென்னங் கல் பிரசித்திபெற்று இருந்தது. காந்தியிடம், போராட்டத்தை நிறுத்தக் கேட்டார்கள். உடனே காந்தி அது என் கையில் இல்லை. திருச்செங்கோட்டில் உள்ள இரு பெண்களின் கையில் தான் இருக்கிறது எனச் சொன்னார். அந்த இருபெண்கள் யார் தெரியுமா? பெரியாரின் மனைவி மற்றும் சகோதிரி! அந்த அளவுக்கு பெண்களை போராட்டக் களத்திலும், பொதுவாழ்விலும் ஈடுபடுத்தியவர் பெரியார். ஆனால் மு.க.ஸ்டாலின் தன் மனைவியையோ, குடும்பப் பெண்களையோ அரசியல் போராட்ட களத்துக்கு அழைத்துவரவில்லை, ஏன் தன் சசோதிரி கனிமொழியைக் கூட அரசியல் செய்து திமுகவில் ஒரு அளவுக்கு மேல் வளரவிடவில்லை தானே?
கருணாநிதி தன்னை எப்போதும் இடதுசாரியாகவும் காட்டிக்கொள்வார். இன்னும் சொல்லப்போனால் திமுகவில் மட்டும் இல்லாவிட்டால் நானே இடதுசாரியாகத்தான் இருந்திருப்பேன் என பலமுறை பேசியிருக்கிறார். தொகுதி பங்கீட்டில் கம்யூனிஸ்ட் கட்சியோடு சிக்கல்வரும்போது கூட ‘தோழர்களுக்கு எப்போதும் இதயத்தில் இடம் உண்டு’ என உதிர்ப்பார் கருணாநிதி. அந்த அளவுக்கு அவருக்குள் இடதுசாரித்தனம் உண்டு. அதனால் தான் தனது மகனுக்கு இடதுசாரி இயக்கத்தின் முன்னோடியும், பாசிசத்தில் இருந்து உலக மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்தவருமான ஸ்டாலினின் பெயரை சூட்டினார். ஆனால் ஸ்டாலின் ஒருகட்டத்தில் பெரியாரிய கொள்கையை உள்வாங்கி தமிழ் சீர்திருத்த மரபோடு தன் பெயரை ஜெயக்குமார் சொல்வதுபோல மாற்றியமைத்திருக்கலாம்.
பெரியாரிச கொள்கையிலும் முழுதாக இல்லாமல், மதங்களுக்குள் நிலவும் மூட நம்பிக்கைகளை மட்டுமே எதிர்க்கும் நுட்பமும் புரிபடாமல் கண்ணைத் தள்ளும் ஸ்டாலினுக்கு, கருணாநிதி இல்லாதது பேரிழப்பே! இன்னொருபுறத்தில் மு.க.ஸ்டாலினுக்கு, அந்த பெயர் வந்த பிண்ணனி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் தெரியுமோ என்னவோ?