சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், “பா.ஜ.க ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை. மக்களுக்கு எதிரான திட்டங்களையே மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. வேளாண் சட்டத்துக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் என பா.ஜ.க-வினர் விமர்சிக்கிறார்கள்.
மத்திய அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இல்லை. இந்தி பேசும் மாநிலத்தில் மட்டும் தான் பா.ஜ.க வளர்ந்து வருகிறது. பிற மாநிலங்களில் வளரவிக்லை. தேசியமும், திராவிடமும் இணைந்து தமிழ் வளர்த்த தமிழகத்தில் எக்காலத்திலும் பா.ஜ.க துளிர்க்க முடியாது. தமிழகத்தில் பாஜக காலூன்றினால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் எடுபடாது. அந்த கூட்டணி கட்டாயத் திருமணம் போன்றது” என்றார்.