கிராமப் பகுதிகளில் நூறுநாள் வேலைதிட்டத்தில் பணிசெய்ய பலரும் ஆர்வம்காட்டுகின்றனர். இதனால் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் உரிய நேரத்தில் அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் தவிப்பதாகவும், நூறுநாள் வேலைதிட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும் எனவும் அகில பாரத இந்து மகாசபாவின் விவசாய அணி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அகிலபாரத இந்துமகா சபாவின் விவசாய அணியின் மாநிலத் தலைவர் திரு.மாணிக்கம்ஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஒருகுடும்பத்தில் ஒருவருக்கு வருடத்தில், நூறுநாள்கள் வேலை அளித்து அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஏரி, குளம், வாய்க்கால் ஆகியவற்ற தூர்வாரும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தத்திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு பொருளாதார ரீதியில் கைகொடுத்தாலும் விவசாயிகளுக்கு வில்லனாக மாறிவிட்டது. குறைவான வேலைநேரம், கண்காணிப்பு இல்லாத பணி என்பதால் நூறுநாள் வேலைக்கு பலரும் சென்றுவிட்டனர். இதனால் விவசாய வேலைக்கு ஆள்கள் கிடைக்காத சூழல் நிலவுகிறது. வயல்தயாரிப்பு, நாற்றங்கால் நடுதல், உரமிடுவது, களைபறிப்பது, அறுவடை செய்வது உள்ளிட்ட எந்த வேளாண் பணிகளுக்கும் இதனால் ஆள்கள் கிடைப்பதில்லை. சம்பந்தப்பட்ட விவசாயி மட்டுமே வேலையாட்கள் இன்றி இதைச் செய்வதும் சாத்தியம் இல்லை.
நூறுநாள் வேலையினால் விவசாயப் பணிகளுக்கு ஆள்கள் கிடைக்காததால் உரிய நேரத்தில் நடவு செய்யவோ, அறுவடை செய்யவோகூட முடியவில்லை. இதனால் பலநேரங்களில் நெற்கதிர் விளைந்த பின்னும்கூட அறுவடை செய்ய தாமதம் ஆகிறது. அதுபோன்ற தருணங்களில் பருவம் தப்பி மழை வந்துவிட்டால் நெற்பயிரே மூழ்கி நாசமாகிவிடும் சூழலும் இருக்கிறது. நாகப்பட்டிணம் மாவட்டம் ஆவராணி கிராமத்தில் நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் ரமேஷ்பாபு என்ற விவசாயி தற்கொலை செய்த சம்பவமும் இப்போது நடந்துள்ளது. அரசு, இதையெல்லாம் பரிசீலனை செய்து நூறுநாள் வேலைத்திட்டத்தில் இருப்போரை நடவு, அறுவடைக்காலங்களில் விவசாய பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அல்லது, இந்த நேரங்களில் நூறுநாள் வேலைத்திட்டத்தை நிறுத்தியேனும் வைக்க வேண்டும்.
நூறுநாள் வேலையில் பணிசெய்பவர்கள் அதைவிட அதிகச்சம்பளம் கொடுத்தாலும்கூட விவசாய வேலைகளுக்கு வருவதில்லை. அதற்கு கண்காணிப்பே இல்லாத நூறுநாள் பணிச்சூழலும் காரணமாகிறது. விவசாயப் பணிகளுக்கு வேலையாட்கள் பற்றாக்குறையால் விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்படுகிறது. இதேநிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாய பரப்பு பெருமளவு குறைந்து, உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
வருடம் முழுவதும் நூறுநாள் வேலை வழங்க காலம் இருக்கிறது. ஆனால் இருபோக விளைச்சலில் குறிப்பிட்ட நாள்களை தவறவிட்டுவிட்டால் தேசத்தின் முதுகெலும்பான விவசாயம் கேள்விக்குறியாகிவிடும். அரசு இவ்விசயத்தில் துரித நடவடிக்கை எடுத்து நூறுநாள் வேலைதிட்டத்தில் பணிசெய்வோரை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.’’என அதில் கூறப்பட்டுள்ளது.